புதன், 17 ஜனவரி, 2024

கல்லூரித் தோழர்கள் சங்கமம்

 எட்டு ஏழாகி ஆறாகி ஒன்றாகும்

கூட்டுப் புறாக்கள் கூடிக் களிக்கும்
பாட்டுப் பாடியும் நடனம் ஆடியும்
சொட்டும் நட்பு மழையில் நனையும்
பழைய நினைவுகள் பரிமாறிக் கொள்ளும்
கழைக் கூத்தாடி போல குதிக்கும்
வண்ண மலர்கள் ஒன்று கூடும்
கண்கள் கலந்து கதைகள் பேசும்
திசைகள் பலவும் ஒருமித்து சேரும்
இசையும் கவியும் இணைந்து ஒலிக்கும்
கல்லூரி வளாகம் விழாக் காணும்
பல்வேறு கதைகள் பரிமாறிக் கொள்ளும்
நாற்பதும் ஐந்தும் சேர்ந்த கணக்கு
நால்திசை இன்று ஓரிடம் சேரும்
நாடுகள் பலவும் மாமல்ல புரத்தில்
நாடிய நட்பின் கூடிய சங்கமம்
சிகரங்கள் தொட்ட சிந்தனைச் சிற்பிகள்
முகவரி மாறிய முற்றிய முகங்கள்
தகவல் தொடர்பில் தொலையாத நட்புகள்
முகநகை மறையா அன்பு உள்ளங்கள்
பாட்டும் கூத்தும் பங்காளிச் சண்டையும்
ஓட்டம் குறைந்த வாலிப வயதில்
வட்டம் சதுரம் முக்கோணம் மறந்து
திட்டம் போட்டு சேர்ந்த கூட்டம்
இன்றும் என்றும் இந்த மகிழ்வே
இதயம் கலந்து இனிதே தொடரும்
பசுமை நினைவுகள் மனதில் பதியும்
விசும்பைத் தொட்டு உயர்ந்து நிற்கும்
நட்பின் வலிமை பறை சாற்றும்
நல்லதே எண்ணும் நன்மைகள் செய்யும்
உயர்த்திய ஏணிக்கு உதவிகள் செய்யும்
அயராத உழைப்பின் அடையாளச் சின்னம்
( நாற்பத்தைந்து வருடம், கல்லூரித் தோழர்கள் சங்கமம், ஜனவரி 25/26)
All reactions:
Singaravelan Thirumalaisamy

இனியதொரு வாழ்த்து

 உழவரைத் தலை வணங்கிப் போற்றுவோம்

உருவான நெல்மணிகள் புத்தரிசியாய் பொங்கட்டும்
கன்னலின் சுவையோடு மஞ்சளும் மங்கலமாய்
பின்னலிட்ட சிறுமியர் சிறுவர் மகிழ்ந்திட
முற்றத்தே தீயூட்டி புதுப்பானை வெண்பொங்கல்
சுற்றம் சூழ்ந்திட. வண்ணக் கோலமிட்டு
வணங்கி நின்று வாழ்த்திடுவோம் உளம்மகிழ
வளமான வயல்வெளி ஊருணி நீர்
கதிரோனின் ஒளிக் கீற்று அனைத்தும்
கருத்தில் இருத்தி தலை வணங்குவோம்
இயற்கை தெய்வமாய் போற்றும் இந்தாளில்
இனியதொரு வாழ்த்து சொல்லி இன்புறுவோம்

காலச் சக்கரம்

 உறக்கம் வராத விடியலில் எதைப் பாடுவது

உறங்க வைக்க யார் வருவாரோ அறியேன்
பறக்கும் புள்ளினங்கள் கூட்டைத் துறக்க நேரமுண்டு
சிறக்கப் பாடும் மார்கழி இறுதி நாளென்று
இமைகள் மூடினால் சிலநூறு காட்சிகள் திரையில்
சுமைகள் மனதில் சுற்றிய எண்ணக் கீற்றுகள்
காலைப் பனியின் குளிர் உடலில் ஊடுருவ
தொலைவில் யாதொரு இறைவன் எழுச்சிப் பாடல்
நாட்கள் மாற்றம் இரவு பகலாய் நிதமும்
நாளைய விடியல் இன்று போல் இல்லை
காலச் சக்கரம் நெடும் பாதையில் உருண்டே
காட்சிகள் மாறிய வண்ணம் உலகம் சுற்றும்

அரபிக் கடலோரம் நாள் ஆறு, ஏழு

 அரபிக் கடலோரம்

நாள் ஆறு, ஏழு
பயணங்கள் ஏதாவதொரு வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும். மூணாரில் இருந்து காலை உணவுக்குப் பிறகு புறப்பட்டு வாகமான் நோக்கிப் பயணம். வழியெங்கும் பசுமை போர்த்திய மலைத் தொடர்கள். அழகிய தோற்றத்துடன் அரண்மனை போன்ற வீடுகள். இத்தகைய வீடுகளில் பசுமைத் தோட்டம் நடுவே வாழ்வது உடல், உள்ளம் இரண்டுக்கும் மிக நலம்.
பல மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, மதிய உணவை மெஸ் போன்ற கடையில் முடித்து, கேரள பாரம்பரிய முறையில், மீண்டும் பயணித்து வாகமான் அடைந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. ஓட்டலில் செக் இன் செய்தபோது அழகான நீர்த்தேக்கத்தில் பல வண்ண மீன்கள் நிறைந்து, அழகாய் தோற்றமளித்தது. ஹனிமூன் அறையை உரிமையாளர் காட்டினார், நல்ல இரசனையோடு கட்டப் பட்டிருந்தது.
சிறிது நேர ஓய்வுக்குப் பின், மலைப் பாதையில், வார விடுமுறையாதலால், வேன்களும் கார்களும் இளைய தலைமுறையினரைச் சுமந்து மெதுவாக ஊர்ந்து சென்றன. கண்ணாடிப் பாலம் அடைந்த போது மழை வேகமாகப் பெய்தபடி, பலத்த காற்றும் கூட, குடை முதல் முறையாகப் பயன்பட்டது. ஆனாலும் நனையாமல் இருக்க முடியவில்லை. கண்ணாடிப் பாலத்தை தூரத்திலேயே நின்று பார்த்துவிட்டு, மெடோஸ் என்ற புல்நிறைந்த மலை முகடு ஒன்றில் மேலேறி, போட்டோக்கள் எடுத்து திரும்பினோம். மழை பெய்தபடியே இருந்ததால், அறைக்குத் திரும்பி, மறு நாள் காலை ஆறு மணிக்கே புறப்பட முடிவானது. மூணார் பார்த்த பிறகு வாகமான் மிகச் சாதாரணமாய்த் தோன்றியது.
ஆறரை மணிக்குக் கிளம்பி, வல்லப் புழா சென்று, பழைய நட்பொன்றை விசாரிக்க நினைத்து, பாதி வழியில், அந்த முகவரியில் வீடு விற்பனைக்கு என கூகுளில் அறிந்து, அங்கு போவதற்குப் பதில் அதிரப்பள்ளி அருவி போக முடிவானது. ரெனி அட்டைப் பூச்சியொன்று இருப்பதைக் கண்டு வெளியே எறிந்தார். சில நிமிடங்கள் கழித்து, என்னுடைய பேண்ட் கால் பகுதியில் தற்செயலாகத் தடவியபோது, சொரசொரவென இருந்தது. குனிந்து பார்த்தபோது அது இரத்தக் கறை, பேண்ட்டை மேலேற்றி பார்த்த போது இரத்தம் கணுக்காலுக்கு மேலே இரண்டு ரூபாய் நாணயம் அளவு உறைந்திருந்தது. அப்போதே உணர்ந்தோம், ரெனி வெளியே எறிந்த அட்டைப் பூச்சி சில மிமீ இரத்தத்தை உறிஞ்சியுள்ளது என. காரை நிறுத்தி, கால்களைக் கழுவி, சானிடசைரில் துடைத்த பிறகு பயணப் பட்டோம்.
அதிரப்பள்ளி அடைந்த போது, ஆற்று நீரோட்டம் மிகக் குறைவாகவும், அருவியின் தோற்றம் சிறிய இரண்டு நீர் வீழ்ச்சியாகவும் அழகு குறைந்து காணப்பட்டது. முந்தைய இரண்டு முறை வந்தபோது ஆர்ப்பரித்துக் கொட்டிய அருவி மிக அடக்கமாக. பாறையில் அமர்ந்து சிறிது நேரம் கழித்து, மீண்டும் பயணித்து, மதிய உணவுக்கு ஓட்டல் சென்று, சூடான மீன் வறுவலோடு முதன்முறை நாவிற்குச் சுவையாய், சாப்பிட்ட பிறகு, விமான நிலையம் நோக்கிப் பயணம். நான்கு மணிக்கே ஏர்போர்ட் வாசலில் இறக்கி விட்டு, அசோக் சென்னை பஸ் பிடிக்க கொச்சி நகருக்கு ரெனியோடு சென்றார். செக் இன் செய்து, பேக் டிராப் செய்து, செக்யூரிட்டி முடித்து, கேட் நான்கருகே அமர்ந்த போது விமான நிலையத்தின் அழகை இரசிக்க முடிந்தது. சமீபத்தில் திருமணமான ஜோடியொன்று வித விதமாய், போட்டோக்கள் எடுத்தபடி, பாரம்பரிய வேட்டி புடவை சகிதமாய், அழகாய் இருந்தனர்.
மற்றொரு பயணத் தொடர் முடிவுக்கு வந்தது.ஒரு மணிப் பயணம் என்ற அறிவிப்புடன், ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே அடைந்து டாக்ஸியில் வீட்டை அடைய ஒன்றரை மணியளவு ஆனது, முப்பத்தாறு கிமீ தூரம் கடக்க. பயணங்கள் தொடரும், மீண்டும் கட்டுரைகளும் தொடரும்.
( மலைத் தொடர் முடிவு)

All reacti

அரபிக் கடலோரம் நாள் நான்கு, ஐந்து

 அரபிக் கடலோரம்

நாள் நான்கு, ஐந்து
முன்னரே பேசி வைத்தபடி ரெனி தன்னுடைய டாக்ஸியில் ஒன்பது மணிக்கு தயாராக காத்திருந்தார். சிற்றுண்டிக்குப் பிறகு புறப்பட்டு, மூணார் நோக்கிப் பயணம் NH 66 தொட்டு வேகமெடுத்தது. அடிமாலியில் மலையேற்றம் ஆரம்பம்.
வழி நெடுகிலும் தேயிலைத் தோட்டங்களின் பசுமையும், மலை முகடு மேக மூட்டமும், அருவிகளின் வெண்மைத் தோற்றமும் கண்களுக்குக் குளிர்ச்சியாய். மூணார் நுழைவதற்கு முன்பு மதிய உணவு, பிறகு அழகிய பூங்கா விசிட், ஊஞ்சலில் சிறு பிள்ளை போல விளையாட்டு என நேரம் போனது. ஓட்டலை அடைந்து செக் இன் செய்து அறைக்கு வந்த போது குளிரின் தாக்கம் தெரிந்தது. மலையேற ஆரம்பித்த போதே ஏசி ஆஃப் செய்து மலைக் காற்றை சுவாசிக்க நன்றாக இருந்தது.
மறு நாள் காலை பத்து மணியளவில் கிளம்பி, கொழுக்குமலை செல்வதற்கு, சின்னகனல் சென்று அங்கிருந்து ஜீப்பில் பயணம். கொழுக்கு மலை டீ எஸ்டேட் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் சொந்தமானது. 1300 ஏக்கரில் மலைகள் பலவும் கடந்து. 12 கிமீ தார் ரோடிலும், 6 கிமீ பாறைக் கற்களால் ஆன சமமாய் இல்லாத ஆபத்தான பாதையிலும் செல்ல வேண்டியுள்ளதால், நம்மிடம் கையொப்பம் பெற்ற அனுமதிச்சீட்டை நுழை வாயில் அலுவலகத்தில் பணம் செலுத்தி பர்மிஷன் வாங்கி, டீ பேக்டரியில் பதிவிட்ட பிறகு, மிகக் கடுமையான பயணம். சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் உடம்பின் அனைத்து ஜாயிண்ட்களும் செக் செய்யப்படும், உடல் உள்ளே முழுக் குலுக்கலும் உண்டு. அதனால் நானிட்ட பெயர் குலுக்கு மலை. ராஜா ஜீப்பை லாவகமாக ஓட்டியது மட்டுமில்லை, கை தேர்ந்த போட்டோகிராபராகவும். இரட்டை வேடங்களாக என்னையும் நண்பர் அசோக்கையும் கிளிக்கினார். சுமார் 180 ஜீப்கள், சன் ரைஸில் ஆரம்பித்து மாலை வரை அப்பாதையில் சென்று வருவது அதிசயமே. ஒரு ஜீப் இரண்டு முறை மட்டுமே மேலே போய் வர அனுமதி. ஆறு மாதத்திற்கொரு முறை டயர் மாற்றியாக வேண்டுமாம்.
பல அழகான பள்ளத்தாக்குகளைக் கடந்து மலை உச்சிக்கு அருகாமையில் ஜீப்பை நண்பர் நிறுத்தி விட்டு, உச்சி முனையை அடைய , நடந்து சென்று அடைந்த போது, சரிவில் சிலர் ஆபத்தான நிலையில் நின்று போட்டோ எடுப்பது நமது மனம் பதைத்தது.
பாதை ஒரு மீட்டர் அகலமே உள்ள களிமண் பாதை. அழகான மலைச் சிகரங்கள், மேகங்கள் கீழே, மெதுவாக நகர்ந்து செல்லும் காட்சி, மலையை முகம் மறைப்பது போன்று, திரும்பவே மனமில்லை. இயற்கையின் அழகை இரசித்தபடியே இருக்கலாம்.காலம் முழுதும் மன அமைதிக்கு நல் மருந்தாகும்.
கீழே இறங்கும் போது, மலைப் பாதையின் அடுத்த பக்கத்தில் தமிழ் நாட்டு எல்லையில் தேநீர் நிறுத்தம். தமிழ் நாட்டு எல்லையிலும் தேயிலைத் தோட்டம் 1000 ஏக்கர் பரப்பளவில், ஆக்டிவ் அற்று, தமிழ்நாட்டு பிரபல அரசியல் வாதிக்குச் சொந்தமென ராஜா சொன்னார்.
மலையேறுவதற்கு முன்பே, ரெனியின் வீட்டிற்கும் சென்று, சிறிய ஓடையொன்றை இரசித்தோம். அங்கிருந்து திரும்பி மூணாரில் அரங்கொன்றில் நடைபெறும் கதகளி நடனமும், களரி விளையாட்டும் பார்க்க இரண்டு மணி நேரம் காட்சிக்கு உட்கார உடல் ஒத்துழைக்க மறுத்ததால், ஓட்டலுக்குத் திரும்பி, மறுநாள் வாகமான் செல்ல தயார் செய்ய ஆரம்பித்த போது, திங்களன்று பயணம் முடிகிறதே என சிறிய மன வருத்தம்.
( மலை தொடரும்)
All reactions:
Ashok Kumar, Selva Muthiah and 11 others

அரபிக் கடலோரம் நாள் இரண்டு, மூன்று

அரபிக் கடலோரம்
நாள் இரண்டு, மூன்று
கனவுகள் மெய்ப்பட வேண்டும், மனதிலே உறுதியோடு செயல்படும் கனவுகள் நினைவுகளாக மாறும் என்பதற்கு எனது பயணங்களே சாட்சி. திட்டமிடல் அவசியம் என்பது இன்று மேலும் உணர்த்தப் பட்டது. நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்குள் நுழைந்து, சுற்றுலாத் தலங்களைப் பார்க்க பல்வேறு வழிகளை யோசித்து முடிவாக, எர்ணாகுளம் ( கொச்சி) சென்று தங்கி அங்கிருந்து பயணப்படுவதென, இரயில் பயணம் காலை 9 15க்குத் தொடங்கியது.
கேரளாவிற்குள் நுழையும் எல்லா இரயில்களும், எர்ணாகுளத்திற்கும் திருவனந்தபுரம் இடையே பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை இரயில் நிலையங்களில் நின்றே செல்கின்றன. இரயில் பாதையின் இருபுறமும் பச்சைப் பசேலேன்ற தோற்றம் தொடர்ந்து வருகிறது. கோட்டயம், கொல்லம், வர்க்கலா என பல நிறுத்தங்கள்.
மாலை நான்கு மணிக்கு ஓட்டலை அடைந்து, சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, லூலு மால் செல்ல முடிவெடுத்து, சவுத் ஸ்டேக்ஷன் மெட்ரோவில் பயணித்து, எடப்பள்ளியில் இறங்கி, மாலில் நுழைந்தபோது, சில வருங்களுக்கு முன்பு பிரமாண்டமாய் தோன்றிய மால் இப்போது சாதாரணமாய்த் தோன்றியதன் காரணம், பெங்களூர் பீனிக்ஸ் மாலின் சமீபத்திய விசிட்.
மறுநாள் வர்க்கலா செல்ல முடிவெடுத்து, இரயிலில் காலை 7 15க்கு புறப்பட்டு, நண்பகலில் இரயில் நிறுத்தம் அடைந்தபோது, டாக்ஸியுடன் ஷியாம் காத்திருந்தார். மூன்று இடங்களுக்குச் செல்ல முடிவெடுத்து ஆறு மணிக்குள் மீண்டும் வந்து எர்ணாகுளம் இரயிலைப் பிடிக்க வந்துவிடவேண்டுமெனச் சொன்னோம். முதலில் சுமார் 35 கிமீ தூரத்தில் உள்ள ஜடாயு பார்க். சிறிய கோயிலாக இருந்த இடம், கேரளாவின் சினிமாத்துறை சேர்ந்த சிலரால் ஆசியாவின் மிகப் பெரிய பறவைச் சிலையாக உருப்பெற்று சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது.
மலை மேலே செல்ல 800+ படிகளில் செல்லலாம், கேபிள் காரும் உண்டு. நுழைவுச்சீட்டு 250₹ ஜடாயு பார்க் (கேஷ் மட்டுமே), 250₹ கேபிள் கார், சீனியர் சிட்டிஜனுக்கு 10% தள்ளுபடி. கேபிள் காரில் பயணித்து மேலே சென்ற போது பிரமாண்டமாய் ஜடாயு சிலை. சிறிய கோயில் ஒன்றும். இராமயணப் புகழ் பெற்ற இவ்விடத்தில் பாறையொன்றில் பாதச் சுவடுகள் பதிந்து. வட இந்தியர்கள் அதிகமாகக் காணப் பட்டனர்.
அடுத்த பயணம் கப்பில் கடற்கரை, ஒருபுறம் கடலும், மறு புறம் பேக் வாட்டரும் சாலையின் இருபுறமும் விரிந்து அழகான தோற்றம். தேநீர் அருந்தி, மறுபடி பயணித்து வர்க்கலா கிளிஃப்
சென்ற போது, மலை உச்சியிலிருந்து கீழே கடல், பச்சைப் பசேலென்ற மலையோரத் தாவரங்கள் என அழகான தோற்றம். சுமார் மூன்று கிமீ மலைப்பாதையில் நடந்து கடை வீதி, ரிசார்ட்கள் என எண்ணிலடங்கா கடைகளைக் கடந்த போது, கோவாவை விட அழகாய்த் தோன்றியது. மினி கோவா என்றழைக்கப் படுவது மிகப் பொருத்தம். கால்கள் வலியில் கெஞ்சின, கல் பெஞ்சில் உட்கார்ந்து, கடலின் அழகை இரசித்த போது, அயல் நாட்டினர் பலரையும் காண முடிந்தது.
மீண்டும் எர்ணாகுளம் பதினொரு மணியளவில் அடைந்து மறுநாள் மூணார் பயணிக்க பேக்கிங் செய்து உறங்கச் சென்றபோது, மூன்று நாட்கள் மலைப் பிரதேச சுற்றுலா கண் முன்னே தோன்றியது.
(மலை தொடரும்)